புதுடெல்லி: மக்கள் வாழவே தகுதியற்ற நகரமாக மாறிவரும் டெல்லியில், வழக்கமான வீடுகளைப் போலன்றி, சற்று பாரம்பரிய முறையில் வீட்டை கட்டியிருக்கின்றனர் ஒரு தம்பதியினர். தங்களது வீட்டைச் சுற்றி 15,000 செடிகளை நட்டு, ஆரோக்கியமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். தங்களது வீட்டையே இயற்கை சூழ்ந்த வனமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த உத்வேக கதை குறித்து காண்போம்.
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் மூச்சுத் திணறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய்வாய்ப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் அமைந்துள்ளது பீட்டர் சிங் மற்றும் நினோ கவுரி என்ற தம்பதியினரின் இல்லம். இவர்கள் 15,000க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார்கள். இதனால், காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 10-15 என்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த தம்பதியினர் ஆரோக்கியமான காற்றை சுவாசித்து வருகிறார்கள்.
காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது.
அதாவது, டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு மத்தியில், தங்களது சுற்றுப்புறத்தை இயற்கையோடு இணைந்த வாழ்வாக மாற்றிவிட்டனர். இதற்கு பின்னால் ஒரு பிளாஸ்பேக்கும் உள்ளது. பீட்டர் தனது மனைவி நினோவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதை நினைவு கூர்ந்தார். நினோவுக்கு கீமோதெரபி சிகிச்சை செய்த பிறகு, டெல்லியில் நிலவும் மாசான காற்றை சுவாசித்தால் நுரையீரல் சார்ந்த பிரச்சினை வரும் என்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் டெல்லியே திணறிக் கொண்டுதான் இருக்கிறது என்றால் மிகையாகாது. ஒரு மருத்துவர் அவர்களை டெல்லியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார், ஆனால் மற்றொரு ஆயுர்வேத நிபுணர், முற்றிலும் இயற்கையான வாழ்க்கை முறையை பின்பற்றும்படி அவர்களை வலியுறுத்தினார்.
இருவரும் டெல்லியை விட்டு வெளியேறி, கோவாவில் சிறிது காலம் தங்கியிருந்தனர். அவர்களின் மகனும் தனது பெற்றோருக்கு ஒரு வீட்டையும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அது அவர்களுக்கு செட் ஆகவில்லை. இதனால் தங்கள் சொந்த வீட்டையே ஆரோக்கியமான, இயற்கை சூழ்ந்த ஒரு சரணாலயமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன் டெல்லிக்கு திரும்பினர். அதன் முயற்சி தான் தற்போது அவர்கள் குடியிருக்கும் இயற்கை சூழ்ந்த வீடு.
டெல்லியில் இருக்கும் வழக்கமான வீடுகளைப் போலன்றி, சற்று பாரம்பரிய முறையில் வீட்டை கட்டியிருக்கின்றனர். சிமெண்ட் கலவைக்கு பதிலாக சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தி செங்கல்லால் இந்த வீட்டை கட்டியிருக்கிறார்கள். நவீன வண்ணப்பூச்சுகளுக்கு பதிலாக சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூரைக்கு கான்கிரீட்களை பயன்படுத்தாமல், கல் ஓடுகளை பயன்படுத்தியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த அணுகுமுறையானது உள்ளே இருக்கும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவதாக அமைந்துள்ளது. இதனால் கோடை காலங்களில் கூட குளிர்ச்சியாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான செடிகளை வளர்த்து வருகிறார்கள். இதனால் நல்ல ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க முடியும். இதனால் அவர்களின் இல்லத்தில் ஏக்யூஐ தொடர்ந்து 15 க்குக் கீழே உள்ளது. சூரிய ஒளியை பயன்படுத்தி முன்சாரமும் எடுத்துக் கொள்கிறார்கள். நீர் பாதுகாப்பு மற்றொரு முக்கிய அம்சமாகும், தாவரங்களின் பாசனத்திற்காக வீட்டில் 15,000 லிட்டர் தொட்டியில் மழைநீரை சேகரிக்கின்றனர்.
நீர் கவனமாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. பீட்டரும் நினோவும் சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே அனைத்தையும் அறுவடை செய்கிறார்கள். இவ்வாறு யாரையும் சார்ந்திருக்காமல், இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றான டெல்லியில் இவ்வாறு ஒரு வீடு அமைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.