கான்பரா: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சமூகப் பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உள்ளது என அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
வியாழன் அன்று இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உலக அளவில் இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தது:
“நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்ற சமூக பொறுப்பு தற்போது சமூக வலைதள நிறுவனங்களுக்கும் உள்ளது. அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சட்டம் மிக தெளிவாக உள்ளது. அதில் சந்தேகம் வேண்டாம்.
எப்படி 18 வயது எட்டாதவர்களுக்கு மது கூடாது என சட்டம் சொல்கிறதோ அது போன்றது தான் இதுவும். மேலும், இளம் ஆஸ்திரேலியர்களுக்கு இது நல்ல பலன் தரும், தீங்கினை குறைக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அடுத்த 12 மாதங்களுக்கு பிறகு தான் அங்கு அமலுக்கு வர உள்ளது. இருப்பினும் இது எப்படி செய்யப்பட்டுக்கு வரும் என்பது குறித்த தெளிவான விளக்கம் எதுவும் அரசு தரப்பில் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு 32.5 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.