சர்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மாதத்தின் இறுதி வியாழக்கிழமை என்பதால் பங்கு முன்பேர வணிகத்தில் நேற்று இம்மாதத்துக்கான கணக்கு முடிக்கப்பட்டது. பொதுவாக, இந்த நாளில் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என்பதால் சந்தைகள் சரிவை சந்திப்பது வழக்கம். இந்த நிலையில், சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட மந்த நிலையின் தாக்கமும் இந்திய சந்தைகளில் கூடுதலாக எதிரொலி்த்தது.
இதையடுத்து, சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் (1.48%) சரிந்து 79,043 புள்ளிகளில் நிலைபெற்றது. மேலும், தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 360 புள்ளிகள் (1.49%) வீழ்ச்சியடைந்து 23,914 புள்ளிகளில் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவன பங்குகளின் விலை சரிவைக் கண்டன. குறிப்பாக, இன்ஃபோசிஸ் பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 3.46 சதவீதம் வரை குறைந்தது. அதைத் தொடர்ந்து மஹிந்திரா (3.3%), பஜாஜ் பைனான்ஸ் (2.8%), அதானி போர்ட்ஸ் (2.7%) ஹெச்சிஎல் டெக் (2.5%) நிறுவனப் பங்குகளும் கணிசமாக குறைந்தன.
அதானி பங்குகள்: அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதானி குழுமத்தின் அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலை நேற்றைய வர்த்தகத்தில் 15.69 சதவீதம் அதிகரித்து 560-க்கு வர்த்தகமானது. அதானி பவர் 6.95 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 10 சதவீதமும், அதானி எண்டர்பிரைசஸ் 1.63 சதவீதமும் அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் 10 சதவீதமும் ஏற்றம் கண்டன. அதேநேரம், அதானி வில்மர், அம்புஜா சிமெண்ட், ஏசிசி பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.