‘அமரன்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு சாய் பல்லவி தனது தொலைபேசி எண்ணை எழுதித் தருவார். படத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்தான் என்றாலும், ரசிகர்கள் ‘சும்மா’ இருப்பார்களா? அந்த எண்ணை நோட்பண்ணிக் கொண்டு சாய் பல்லவிக்கு போன்போட ஆரம்பித்துவிட்டனர்.
அந்த எண்ணோ சென்னையைச் சேர்ந்த வி.வி.வாகீசன் என்கிற இளைஞருக்குச் சொந்தமானது. ஆர்வக் கோளாறில் ரசிகர்கள் சாய் பல்லவி எடுப்பார் என நினைத்து வாகீசனுக்கு போன் போட்டு அவரை படுத்தி எடுத்துவிட்டார்கள். இதனால் கடுப்பான வாகீசன், இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லிங்குசாமியின் ‘சண்டக்கோழி’ படம் வெளியானபோது, படக்குழுவை வாழ்த்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார் இயக்குநர் வசந்தபாலன். படத்தின் விளம்பரத்தில் வாழ்த்துச் செய்தியோடு அவருடைய தொடர்பு எண்ணும் வெளியாக, தொடர்ந்து வந்த அழைப்புகளால் ஆடிப்போனார் வசந்தபாலன். இந்த ‘ஃப்ளாஷ்பேக்’கை முகநூலில் நினைவுகூர்ந்துள்ள வசந்தபாலன், ‘நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே…’ என்று கலாய்த்திருக்கிறார்!