வீடு வாங்கத் தீர்மானிப்பது வாழ்க்கையில் எடுக்கும் முக்கியமான முடிவுகளில் ஒன்று. ஏனென்றால், அது உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய முடிவாக இருக்கலாம். முதல் முறையாக வீடு வாங்கும்போது எடுக்க வேண்டிய எண்ணற்ற நுண்-முடிவுகளைப் பற்றிய பயம் இருக்கும். ஆனால், வீடு வாங்கும்போது சில வழிமுறைகளைக் கையாண்டால், எந்தப் பயமுமில்லாமல் வெற்றிகரமாக வீட்டை வாங்க முடியும்.
மாதாந்திர தவணை: வீடு வாங்கும்போது முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சம் ‘இ.எம்.ஐ.’ எனப்படும் மாதாந்திரத் தவணை. இந்த மாதாந்திரத் தவணையின் சுமையைச் சரியாகத் திட்டமிட்டால் பேரளவு குறைக்க முடியும். வீடு வாங்கும்போது முன் பணமாகப் பெரிய தொகையைச் செலுத்திவிட்டால், இந்த மாதாந்திரத் தவணையைச் செலுத்தும் காலத்தையும் கடன்தொகையின் வட்டியையும் குறிப்பிட்ட அளவு குறைக்கலாம். சேமிப்புத் தொகை, முதலீடுகள் போன்றவற்றை வைத்து வீட்டுக் கடனின் முதல் தொகையைக் குறைக்க முயலலாம். அத்துடன், வருமானம் உயரும்போதும், மாதாந்திரத் தவணை செலுத்தும் சதவீதத்தைச் சற்று அதிகரிக்கலாம்.
உங்கள் வருமானத்தில் 40 முதல் 50 சதவீதத்தை மாதாந்திர வட்டி செலுத்தப் பயன்படுத்தலாம். அத்துடன், பெரும்பாலும் குறுகிய கால மாதாந்திரத் தவணையைத் தேர்ந்தெடுக்க முயல்வது நல்லது. மாதந்தோறும் ரூ. 27,000-க்குப் பதிலாக ரூ.35,000 கட்டுவது ஆரம்பத்தில் கடினமானதாகத் தோன்றலாம். ஆனால், குறுகிய காலத்தில் மாதாந்திரத் தவணையைக் கட்டி முடிக்கும்போது வட்டி விகிதத்தில் பெரும் பகுதியைச் சேமிக்க முடியும்.
தேவை, அவசியம்: முதல் முறை வீடு வாங்குபவர்கள் தேவை, அவசியம் என்ற இரண்டு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்க வேண்டும். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட வீடு அவசியம் என்றால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்ற தேவைகளான நவீன சமையலறை, உள் அலங்காரம் போன்ற ஆடம்பர வசதிகளில் சமரசம் செய்துகொள்ளலாம்.
நகரத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதியில் வீடு வாங்குவது சிறந்த விஷயம். ஆனால், அதற்காக வாழ்நாளில் பெரும்பகுதியைக் கடன்தொகையைத் திருப்பிச்செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கில் எடுத்துகொள்வது அவசியம். அதனால், உங்கள் பட்ஜெட்டில் கையாளக்கூடிய விலையில் எந்தப் பகுதியில் வீடு கிடைக்கிறதோ அதை வாங்குவதுதான் காலப்போக்கில் சிறந்த முடிவாகத் தெரியும். உங்கள் சக்திக்கு உட்பட்ட மாதாந்திரத் தவணையில் வீடு வாங்கும்போது, அது உங்கள் தற்போதைய வாழ்க்கை முறையைப் பெரிதாகப் பாதிக்காது.
உள் அலங்காரம்: உள் அலங்காரத்துக்குத் தனியாகச் செலவு செய்வதைத் தவிர்க்க விரும்பினால், குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து உங்கள் ரசனைக்குப் பொருந்தும்படி நீங்களே புது வீட்டின் உள் அலங்காரத்தைத் திட்டமிடலாம். இதன்மூலம், உள் அலங்கார வடிவமைப்பாளருக்குச் செலவு செய்வதைத் தவிர்க்கலாம்.
சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்துவது: நீங்கள் வாங்கியிருக்கும் வீட்டுக் கடனை மட்டுமல்லாமல், கிரெடிட் கார்ட், வாகனக் கடன்கள் போன்றவற்றின் மாதாந்திரத் தவணையைச் சரியான நேரத்தில் கட்டுவது முக்கியம். வங்கியில் நம்பகமான ‘கிரெடிட் ஸ்கோரை’ பராமரிப்பது வீட்டுக் கடன் பெறுவதற்கு அவசியம். அத்துடன், கடன்தொகையில் ஒரு மாதாந்திரத் தவணையைச் செலுத்தத் தவறினாலோ தாமதமானாலோ அது உங்கள் ‘கிரெடிட் ஸ்கோரைப்’ (CIBIL) பாதிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சந்தை நிலவரம்: சந்தை நிலவரம் சரியானவுடன் வீடு வாங்கலாம் என்று அனைவருமே நினைப்போம். ரியல் எஸ்டேட் சந்தை என்பதும் பங்குச் சந்தை போன்றதுதான். எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால், வீடு வாங்குவதற்கான முன்பணத்தைத் தயார் செய்துவிட்டால், சரியான நேரத்துக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. உங்களின் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றும்படி வீடு கிடைத்தால், சந்தை நிலவரம் பற்றி யோசிக்காமல் அதை வாங்குவதே சிறந்தது. – கனி