திகா(மேற்கு வங்கம்): வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
ஜெகநாதர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக திகாவுக்குச் சென்றுள்ள மம்தா பானர்ஜி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்குத் திரும்ப விரும்புபவர்கள் அழைத்து வரப்பட வேண்டும்” என்று கூறினார்.
இந்துக்கள் தாக்கப்படும் வீடியோக்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, “இது தொடர்பாக நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கூறியுள்ளேன். பல போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை முஸ்லிம் மதகுருமார்களும் விமர்சித்துள்ளனர். இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அரசு வங்கதேசத்துக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பியுள்ளது, அது அவர்களின் பொறுப்பு. அந்த நாட்டிலிருந்து அதிகமானோர் திரும்பி வருவதற்கு விசா வழங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் என்னிடம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இந்தியா-வங்கதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பானர்ஜி, “விமானங்கள் மற்றும் ரயில்கள் இயங்குவதாகவும், விசா மற்றும் பாஸ்போர்ட் உள்ளவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்திய-வங்கதேச எல்லைகள் எதுவும் மூடப்படவில்லை” என்று உறுதிபட கூறினார்.
வங்கதேசத்தில் 17 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களில் இந்துக்கள் 8% உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்துக்கள் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.