சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரராக ஆல்ரவுண்டரான பியூ வெப்ஸ்டர், மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக 30 வயதான பியூ வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியின் போது ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் காயம் அடைந்தார். அவர், முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அறிமுக வீரரான வெப்ஸ்டர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தாஸ்மேனியாவைச் சேர்ந்த வெப்ஸ்டர், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு போட்டியில் கடந்த இரு சீசன்களில் பேட்டிங்கில் 1,788 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 9 அரை சதங்கள் அடங்கும்.
கடந்த சீசனில் பேட்டிங்கில் 900 ரன்களையும், பந்து வீச்சில் 30 விக்கெட்களையும் வேட்டையாடி இருந்தார். இதன் மூலம் 132 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சீசனில் அதிக ரன்களையும், அதிக விக்கெட்களையும் வீழ்த்தியிருந்த மேற்கு இந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸின் சாதனையை சமன் செய்திருந்தார்.
இந்த சீசனில் முதல்தர கிரிக்கெட் பியூ வெப்ஸ்டர் 56 சராசரியுடன் 448 ரன்கள் சேர்த்துள்ளார். அதேவேளையில் பந்து வீச்சில் 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 145 ரன்கள் சேர்த்ததுடன் 7 விக்கெட்களையும் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மார்னஷ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.