சென்னை: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற பங்கஜாம்பாள் சமேத கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் கோயிலில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அமைச்சர், நீதிபதி முன்னிலை: குடமுழுக்கு விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் பவானி சுப்பராயன் ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர். சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக கடந்த 25-ம் தேதி கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 26-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது.
புனித நீர் தெளிப்பு: இதையடுத்து, நேற்று முன்தினம் (நவ.27) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 8 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க நான்காம் கால யாகசாலை பூஜையுடன் பங்கஜாம்பாள், கங்காதீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி கோயில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட அங்கிருந்து அங்கு குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
திருக்கல்யாண உற்சவம்: மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா புறப்பாடு சிறப்பாக நடந்தது. புகழ்பெற்ற கங்காதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து புரசைவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், ஜெ.முல்லை, பெ.க.கவெனிதா, துணை ஆணையர் ஆர்.ஹரிஹரன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பெ.வெற்றிக்குமார், செயல் அலுவலர் சா.ராமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.