புதுடெல்லி: பிஜி நாட்டில் சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்திய அரசின் நிதி உதவியுடன் நேற்று தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பிஜி நாட்டிலுள்ள இந்திய சமூகத்தில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்றைய தமிழ்நாட்டிலிருந்து பிஜிக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களது சந்ததியினர் சார்பில் பிஜியில் நீண்டகாலமாக ஒரு கோரிக்கை எழுந்து வந்தது. இதில் அவர்கள் பிஜியில் நின்று போன தமிழ் வகுப்புகளை மீண்டும் துவங்க வேண்டும் எனக் கோரினர்.
கடந்த பிப்ரவரி 2023-ல் பிஜியில் பிஜியில் நடைபெற்ற 12 ஆவது உலக இந்தி மாநாட்டுக்காக வந்திருந்த மத்திய வெளியுறத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கரிடமும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்நிலையில், பிஜியில் தமிழ் வகுப்புகள் மீண்டும் தொடங்க ஆதரவளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவிலிருந்து இரண்டு தமிழ் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளித்து பிஜியில் பணியமர்த்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசின் இந்த முயற்சியால், பிஜியில் மறைந்து போனதாகக் கருதப்பட்ட தமிழ் மொழி மீண்டும் மலரத் துவங்கி உள்ளது. இந்த தமிழ் கற்பித்தல் திட்டத்தை பிஜி நாட்டு அரசின் கல்வி அமைச்சகம் துவக்கி உள்ளது. இதற்கு பிஜியில் உள்ள ஒரு பெரிய புலம்பெயர் சமூக அமைப்பும், பழமையானதுமான இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் இடத்தை அளித்து உதவுகிறது.
பிஜியின் ராகிராக்கியில் உள்ள பினாங்கு ஐக்கிய சங்கம் பள்ளியில் இந்த தமிழ் வகுப்புகள் நடைபெறும். இதற்காக, இந்தியாவில் இருந்து இரண்டு தமிழ் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இரண்டு தமிழ் ஆசிரியர்களையும் இந்திய அரசு அமர்த்தி அவர்களுக்கான ஊதியங்களை வழங்குகிறது. இவர்கள் பிஜியின் லபசாவில் உள்ள ஐக்கிய சங்க தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஆர்வமுள்ள சமூக உறுப்பினர்களுக்கும் தமிழ் வகுப்புகள் நடத்த உள்ளனர்.
பிஜியில் தமிழ் வகுப்புகள், சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கற்பிக்கப்படுகிறது. இதற்கானத் துவக்க விழா, பிஜியின் ராகிராக்கியில் பினாங்கு ஐக்கிய சங்கத்தின் பள்ளியில் நவம்பர் 27 இல் நடைபெற்றது.
இத்திட்டத்தை துவக்கி வைத்து இந்திய தூதரக ஆணையரான எச்.சி.கார்த்திகேயன் விழாவில் பேசுகையில், “கலாச்சாரத்தை பாதுகாப்பதிலும் வடிவமைப்பதிலும் ஒரு மொழிக்கு முக்கிய பங்கு உள்ளது. 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் துடிப்பான உலகளாவிய மொழியாக தமிழ் விளங்கிறது. தமிழுக்கு வளமான கலாச்சாரம் மற்றும் மொழியியல் பாரம்பரியம் உள்ளது.
இதற்காக பிஜியில் மீண்டும் துவக்கப்பட்டுள்ள தமிழ் மொழியை கற்கும் வாய்ப்பை பிஜி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தால், இந்தியாவுக்கும் பிஜிக்கும் இடையிலான சிறப்பான மற்றும் நீடித்த பந்தம் மேலும் வலுவடைய வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் ஞானேஷ்வர் ராவ், தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் நாராயண், கல்விக்கான நிரந்தர செயலாளர் பிரதிநிதியான வுனிசா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன், ஆர்.சி.மனுபாய் & கோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.உப்பிலியப்பன் கோபாலன் மற்றும் புலம்பெயர் சமூகத்தின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.