கோவை: கோவை நகரில் உள்ள குதிரை வண்டி நீதிமன்ற கட்டிடம் மற்றும் ஹைவேஸ் காலனி கவர்னர் பங்களா ஆகிய இரண்டு பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குதிரை வண்டி நீதிமன்ற கட்டிடம் கடந்த 1863-ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. குதிரை வண்டிகள் உரிய அனுமதியின்றியும், விளக்குகள் இன்றியும் ஓட்டியதற்கு அபராதம் விதிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதால், குதிரை வண்டி நீதிமன்றம் என பெயர் வந்தது.
சுமார் 161 ஆண்டுகளான பழமையான இந்த நீதிமன்றம் கடந்த 2000-வது ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனிடையே, கோவை அரசு கலைக் கல்லூரி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் புதியதாக கட்டிய பிறகு அங்கு இடம் பெயர்ந்தது. இதையடுத்து, பழமையான குதிரை வண்டி நீதிமன்றம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, 2.60 ஏக்கர் பரப்பளவில் உள்ள குதிரை வண்டி நீதிமன்ற கட்டிடத்தை ரூ.9.01 கோடியில் சீரமைக்கும் பணி கடந்த 2021 இறுதியில் தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
கவர்னர் பங்களா: இதேபோல, திருச்சி சாலை ஹைவேஸ் காலனியில் சூலூர் ஜமீன் ஒருவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பங்களாவில் கவர்னர் தங்கி வந்தார். இதனால் கவர்னர் பங்களா என பெயர் வந்தது. சிதிலமடைந்த நிலையில் இருந்த கவர்னர் பங்களாவையும் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சுமார் 13,000 சதுர அடியில் முதல் தளம் மற்றும் தரைத் தளத்துடன் கூடிய கவர்னர் பங்களாவை ரூ.10.25 கோடி மதிப்பில் புதுப்பித்து மறுசீரமைப்பு செய்யும் பணி 2021-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டிடங்களும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரிய சின்னமாக மீட்டெடுத்து புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும் போது, “கோவையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களான குதிரை வண்டி நீதி மன்ற கட்டிடம், கவர்னர் பங்களா ஆகியவை புதுப்பித்து கட்டப் பட்டுள்ளன. அடுத்த 2 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு தொடர்புடைய துறைகளிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு குதிரை வண்டி நீதிமன்ற கட்டிடம் திறப்பு குறித்து நீதித்துறையும், கவர்னர் பங்களா திறப்பு குறித்து அரசும் முடிவெடுத்து அறிவிக்கும்” என்றனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இடநெருக்கடி காரணமாக, குதிரை வண்டி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டி 12 நீதிமன்றங்கள் செயல்பட அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கான கட்டிடங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போது புதுப்பிக்கப் பட்ட கட்டிடத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நீதித்துறைதான் முடிவு செய்யும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவையில் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு புதுப்பொலிவு பெற்ற பாரம்பரிய குதிரை வண்டி நீதிமன்ற கட்டிடம். திருச்சி சாலை ஹைவேஸ் காலனியில் புதுப்பிக்கப்பட்டுவரும் கவர்னர் பங்களா.