வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
வயநாட்டில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். வெற்றியை நோக்கி அவர் முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் என இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி போட்டியிட அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிட்டனர். பிரியங்கா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
உ.பி.யில் 9 தொகுதிகளில் 6-ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளிலுமே ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் அரசியலை தொடங்கிய பிரியங்கா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.
1999-ஆம் ஆண்டு அமேதியில் பாஜக வேட்பாளர் அருண் நேருவுக்கு எதிராக தனது தாயார் சோனியா காந்திக்காக பிரச்சாரம் செய்ய அரசியல் களத்துக்குள் நுழைந்தார் பிரியங்கா காந்தி. தொடர்ந்து அவர் தேர்தல் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வயநாட்டில் போட்டியிட்டு வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.