சென்னை: “ஒரு படம் வந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். படத்தின் கன்டென்ட் சிறப்பாக இருந்தால் மக்களிடையே சென்று சேரும். அதை யாராலும் தடுக்க முடியாது” என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “இந்த இளம் படக்குழுவுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. படப்பிடிப்பு ரசித்து பார்த்தேன். நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம், படக்குழு மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை. செல்வராகவனுடன் பணியாற்றியது புதிய அனுபவம். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்தவர்கள் பிடித்திருந்ததாக தெரிவித்தனர். கன்டென்ட் சிறப்பாக இருந்தால் படம் மக்களிடையே கண்டிப்பாக சென்றடையும்” என்றார்.
மேலும், “ஒரு பிஸ்கட்டை கடையில் விற்க கொடுத்துவிட்டால், அது நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால் அந்த பொருள் வெளியே சென்றுவிட்டது. அதுபோல தான் சினிமாவும். படத்தை நாம் வெளியிட்டு விட்டோம் என்றால், அதை பார்ப்பவர்கள், நன்றாக உள்ளது. நன்றாக இல்லை என சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு.
ஒரு படம் வந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். படத்தின் கன்டென்ட் சிறப்பாக இருந்தால் மக்களிடையே சென்று சேரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இப்போதெல்லாம் எனக்கு பயமாக உள்ளது. ட்ரெய்லர் நாளை வரபோகிறது என நாம் பதிவிட்டால், என் விநியோகஸ்தர் எஸ்.ஆர்.பிரபு மீது உள்ள கோபத்தில் என்னை திட்டுகிறார்கள். என்னென்னமோ பெயர் சொல்லி அழைக்கிறார்கள். நான் சங்கி கிடையாது. அரசியலை கவனியுங்கள். சினிமாவில் தலையிடாதீர்கள். டார்கெட் செய்து தாக்குவது பயமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.