கரு.பழனியப்பன் தனது கல்லூரிக் கால நண்பரும் சக இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை முன்வைத்து அவருக்கான கடிதம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டர்களில் எடுபடாத இந்தப் படத்தை அண்மையில் ஓடிடி-யில் பார்த்துவிட்டு திரைத் துறைப் பிரபலங்கள் பாராட்டி எழுதி வருகின்றனர்.
இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் கரு. பழனியப்பன், ‘உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பைக் காட்டுகிறது. அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக் கொள்வது நம் பயணத்தை தடை செய்யக்கூடும்’ என்று கூறியுள்ளார்.
இதற்கு கண்ணியமான முறையில் எதிர்வினை ஆற்றியிருக்கும் சீனு ராமசாமி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ஓடிடி-யில் 10 கோடி நிமிடங்களைக் கடந்துள்ளதாகக் கூறியுள்ளார். முழுமையாக வாசிக்க > கரு.பழனியப்பனின் விமர்சனமும், சீனு ராமசாமியின் பதிலும்!
பொதுவெளியில் இரண்டு இயக்குநர்களுக்கு இடையிலான இத்தகைய நேரடியான நட்பார்ந்த விவாதத்துக்கு சமூக ஊடகங்கள் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன. இதற்கான பின்னூட்டங்களில், கரு.பழனியப்பனின் விமர்சனத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பேசிவருகிறார்கள். – நந்து