Sunday, June 16, 2024
No menu items!
Google search engine
Homeவாழ்வியல்வெற்றி துரைசாமியின் நினைவாக கூடைபந்து பயிற்சி முகாம்! | Basketball training camp in honor...

வெற்றி துரைசாமியின் நினைவாக கூடைபந்து பயிற்சி முகாம்! | Basketball training camp in honor of Vetri Duraisamy!


சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர், கட்சி அரசியல் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டு வருபவர், மனிதநேயக் கல்வி அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி. அவருடைய மகன் மறைந்த வெற்றி துரைசாமி திரைப்பட இயக்குநர், பறவை ஆர்வலர், கானுயிர் ஒளிப்படக் கலைஞர், பைக் ரைடர், சிறந்த விளையாட்டு வீரர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்தவர். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வரும் படைப்புத் திறன் மிக்க மாணவர்களுக்குத் தரமான திரைப்படக் கல்வியை இலவசமாக வழங்கும் நோக்குடன், இயக்குநர் வெற்றிமாறன், ‘பன்னாட்டுத் திரை-பண்பாடு ஆய்வகம்’ (IIFC) என்கிற அற நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அப்போது அதற்கு அடித்தளமாக நின்று உதவியவர் வெற்றி துரைசாமி. அவர் இயக்கிய ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம், தமிழ்நாட்டின் ஆன்மா என்பது விவசாயம்தான் என்பதை எடுத்துக்காட்டியது. அவர் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்கள் – விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். திரைப்படத் துறையில் மக்களின் கதைகளைப் படமாக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும், தான் ஒரு கானுயிர் ஒளிப்படக் கலைஞர் என்ற தனியாத ஆர்வம் அவரை கேமராவுடன் புதிய புதிய பிரதேசங்களுக்குப் போக வைத்துக்கொண்டே இருந்தது. அத்துறையில் அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ நிறுவனம் சிறந்த ஒளிப்படக் கலைஞராக அவரைத் தேர்வு செய்தது.

வெற்றி துரைசாமி

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கும் நோக்கத்துடன் இமாசலப் பிரதேசத்துக்குத் தனது நண்பருடன் சென்றிருந்த வெற்றி துரைசாமி கார் விபத்தில் பலியானார். அவரது எதிர்பாராத இழப்பு திரையுலகிலும் அவருடைய நண்பர்கள் வட்டத்திலும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியது. மறைந்த வெற்றி துரைசாமியின் வெற்றிடத்தைப் போக்கும் விதமாகப் பல்வேறு நற்செயல்களை அவருடைய நண்பர்கள் வட்டாரம் முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றாக ‘வெற்றி ஸ்போர்ஸ் அகாடமி’ தொடங்கப்பட்டு, கோடைக்காலக் கூடைப்பந்து பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு வருகிறது.

வெற்றி துரைசாமியுடன் பள்ளி நாள்களில் தொடங்கி அவருடைய நண்பராக இருந்து வந்துள்ளவர் முனைவர் சி.எம்.பாலசுப்ரமணியன். இவர் தான், தனது நண்பரின் நினைவைப் போற்றும் விதமாக ‘வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடெமி’யைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக, முதலாமாண்டு கோடைக்காலக் கூடைப்பந்து பயிற்சிப் பட்டறையைத் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி 30 நாட்களாக நடத்தி வருகிறார். சென்னை, அசோக் நகர், ராகவன் காலனியில் உள்ள மாநாராட்சி கூடைப் பந்து மைதானத்தில் இந்தப் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கூடைபந்து பயிற்சி முகாம்

10 வயது முதல் 16 வயது வரையிலான 50 பள்ளி மாணவ, மாணவியர் இந்தப் பயிற்சியில் பங்கெடுத்து வருகின்றனர்.

வெற்றி துரைசாமியின் 46ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு நினைவேந்தல் செய்யும் நிகழ்ச்சியுடன் கூடைப்பந்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுள்ள மாணவ – மாணவியருக்கு விளையாடும்போது அணிய ஏற்ற வகையில் புதிய ஜெர்சி டி-சர்ட்கள் வழங்கப்பட்டன. இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரியும் முன்னாள் பள்ளி முதல்வரும், கூடைப்பந்து பயிற்சியாளருமான எஸ்.ஸ்ரீநாத், இந்திய வங்கியின் வாலிபால் அணியில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவருமான தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு கூடைப்பந்து விளையாட்டின் நுணுக்கங்களை எடுத்துக் கூறி, அவர்களுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்கள். பயிற்சிப் பட்டறை குறித்து சி.எம்.பாலசுப்ரமணியன் நம்மிடம் கூறும்போது: “வெற்றியை ஒரு திரைப்பட இயக்குநராகவும் பறவை ஆர்வலராகவும் அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னைப் போன்ற நண்பர்களுக்குத்தான் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பது தெரியும். அவர் ஒரு சிறந்த பைக்கர் மட்டுமல்ல; அட்டகாசமான கூடைப்பந்து விளையாட்டு வீரர், வாலிபால், டேபிள் டென்னிஸும் அற்புதமாக விளையாடுவார். கடந்த ஆண்டு மே மாதம் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘கூடைப்பந்து, வாலிபால், பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கேரம், கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு இலவசமாகப் பயிற்சியளிக்கும் அகாடமி ஒன்றைத் தொடங்குவோம்’ என்றார். அவரது எண்ணத்தை ‘வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மூலம் தொடர்ந்து செயல்படுத்துவோம்” என்றார். இவர், மீனாட்சி அகாடெமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவுக்கு துணை இயக்குநராகப் பணி புரிந்து வருகிறார்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments