Sunday, June 16, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாஉமா ரமணன்: காற்றினில் கேட்கும் காவிய ராகம்! | uma ramanan passes away

உமா ரமணன்: காற்றினில் கேட்கும் காவிய ராகம்! | uma ramanan passes away


பெற்றோரின் விருப்பத்துக்காக முறையாக இசை கற்றுக்கொண்டவர் உமா ரமணன். தனது கல்லூரிக் காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் பல வெல்கிறார். இந்த சமயத்தில், தனது வருங்கால கணவரான ஏ.வி.ரமணனை சந்திக்கிறார். அவரோ, தான் நடத்திவரும் மேடைக் கச்சேரிகளில் பாடல்களைப் பாடுவதற்கான பெண் குரலைத் தேடிக் கொண்டிருக்கிறார். உமா ரமணின் குரல் அவரது கச்சேரிக்கும், வாழ்க்கைக்கும் ஆதார ஸ்ருதியாக மாறுகிறது. இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.

ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து ‘பிளே பாய்’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். அதன்பின்னர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 1977-ம் ஆண்டு ‘கிருஷ்ணலீலா’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடினர். இந்த நேரத்தில்தான் 1980-ல் இளையராஜா இசையில் ‘நிழல்கள்’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் வந்த ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடல் உமா ரமணனுக்கு தமிழ் திரை உலகில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இப்பாடல் இசை விரும்பிகளின் பாடல் சேமிப்புகளில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும்.

‘பூங்கதவே’ பாடல் உருவமைப்பில் ஒளிந்திருக்கும் அனைத்து இசை அற்புதங்களையும் பாடலை பாடிய தீபன் சக்கரவர்த்தி – உமா ரமணன் குரல்கள் அத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும். மென்மை எப்படியிருக்கும் என்பதை எளிமையாக விளக்க, இந்தப் பாடலின் சரணங்களில் உமா ரமணன் பாடியிருக்கும் ‘ம்’ என்ற ஓர் எழுத்தை உற்றுக் கேட்டாலே போதும் என்பதே நிதர்சனம்.

தொடர்ந்து அதே ஆண்டு அவரது கணவர் இசையில் வெளியான ‘நீரோட்டம்’ , இளையராஜா இசையில் ‘மூடுபனி’ ஆகிய படங்களில் உமா ரமணன் பாடியிருந்தார். 1981-ல் வெளிவந்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் வந்த ‘ஆனந்த ராகம்’ பாடல் உமா ரமணனின் திரையிசைப் பயணத்தில் மற்றொரு மகுடமாக அமைந்தது.

பதின் பருவத்து நாயகியின் உள்ளக் கிடக்கை உமா ரமணனின் குரலில் கேட்டு உருகாதோரே இருக்க முடியாது. வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசைக்கோர்ப்பில் ரோலர் கோஸ்டர் உணர்வைக் கொண்டு வரும் ‘ஆனந்த ராகம்’ பாடலில் உமா ரமணனின் குரலோடு சேர்ந்து பாடல் கேட்பவர்களின் செவியும் மனதும் ஊசலாடியபடி ஆனந்த ராகத்தை ஆரதிக்கச் செய்திருக்கும். வயலின்கள், வயோலோ, பேஸ், கீபோர்ட், கிடார், தபேலா, செனாய் இவைகளோடு உமா ரமணன் குரலும் சேரும்போது, இப்பாடலின் வரிகளில் வருவது போலவே ‘காற்றினில் கேட்கும் காவிய ராகம்’ தான் அது என்பதை உணரலாம்.

அதே ஆண்டில் ‘கோவில் புறா’ திரைப்படத்தில் ‘அமுதே தமிழே’ பாடலை உமா ரமணன் பாடியிருப்பார். உமா ரமணின் மற்றொரு சிறப்பாக கூறப்படுவது அவரது மொழி உச்சரிப்பு. அவர் பாடிய பல பாடல்களில் இதை நன்றாக உணர முடியும். தமிழின் சிறப்பை வருணிக்கும் இப்பாடலை உமா ரமணனின் குரலில் தேனமுதாய் தித்திக்கும்.

1982-ல் ‘தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் ‘பூபாளம் இசைக்கும்’ பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து உமா ரமணன் பாடியிருப்பார். இருள் விலகி வெளிச்சம் வரப்போகும் அதிகாலையின் அமைதியை அழகாக்கும் அத்தனை அம்சங்களையும் இந்த இருவரது குரலில் இந்தப் பாடல் கொண்டு வந்திருக்கும். இருளின் குளுமையும் வெளிச்சத்தின் கதகதப்பையும் கலந்திருக்கும் இருவரது குரலில் இப்பாடலைக் கேட்பது அத்தனை சுகமானது. அதுவும் சரணங்களில் உமா ரமணனின் குரலில் வரும் அந்த “னன னன னன னன னா” எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.

அதே ஆண்டு இளையராஜாவுடன் இணைந்து பகவதிபுரம் ரயில்வே கேட் திரைப்படத்தில் ‘செவ்வரளித் தோட்டத்துல’ பாடலை பாடியிருப்பார். கிராமத்துக் காதலர்கள் பாடிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலை உமா ரமணன் பாடியிருக்கும் விதம் சிறப்பானது. பாடல் வரிகளின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ற வகையில் பாவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.

தொடர்ந்து இளையராஜாவுடன் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ‘மேகங் கருக்கையிலே’ பாடலையும், பாட்டுப் பாடவா படத்தில் ‘நில் நில் நில்’ பாடலையும் உமா ரமணன் பாடியிருப்பார். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தனித்துவமிக்க உமா ரமணனின் குரல் ஒருவித ஈர்ப்பை உண்டாக்கி இருக்கும். அதேபோல் முதல் வசந்தம் படத்தில் ‘ஆறும் அது ஆழமில்ல’ பீஃமேல் வெர்ஷனை உமா ரமணனின் குரலில் கேட்டால் மனது முழுக்க பேரன்பின் பெரும்சோகம் அப்பிக்கொள்ளும்.

உமா ரமணன் – ஜேசுதாஸ் காம்போதான் பலரது ஆல்டைம் பேஃவரைட். ஒரு பேஸ் வாய்ஸ் ஒரு ஷார்ப்பான வாய்ஸுடன் இணையும்போது பாடல் கேட்பவர்களுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்விருவரும் இணைந்த பாடிய அனைத்துப் பாடல்களுமே ஸ்பாட்டிஃபை காலத்திலும் அசைக்க முடியாதவையே. ‘கஸ்தூரி மானே’, ‘கண்ணனே நீ வர’, ‘ஆகாய வெண்ணிலாவே’, ‘நீ பாதி நான் பாதி’ என ஒவ்வொரு பாடலும் இன்றளவும் மறக்கமுடியாதவை.

இதேபோல் பேஸ் நோட்டில் பாடக்கூடிய அருண்மொழியுடன் இணைந்து உமா ரமணன் பாடிய ‘முத்தம்மா முத்து முத்து’, ‘காதல் நிலாவே’, ‘இது மானோடு மயிலாடும்’ பாடல்களும், உன்னி மேனன் உடன் இணைந்து பாடிய ‘பொன் மானே கோபம்’ பாடலும் இசை ரசிகர்களின் நினைவில் நீக்கமற நிறைந்திருப்பவை.

எம்எஸ்வி, சங்கர் – கணேஷ், டி.ராஜேந்தர், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி,மணி சர்மா, ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர் என பல இசையமைப்பாளர்களின் இசையில் உமா ரமணன் பாடல்களை பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் உமா ரமணின் குரலில் வந்த பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.

பொதுவாகவே இளைப்பாறுதலுக்கு சிறந்தது இசை. மனதுக்குள் உறைந்து கிடக்கும் கவலையும் சோகமும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கேட்கும் ஒரு பாடலால் கரைந்து போகும். வெகுதூரத்தில் இருந்து ஒலிக்கும் அந்தக் குரலில் ஆறுதலும் பரிவும் ஜீவனாய் கலந்திருக்கும். அப்படி காற்றினில் கேட்கும் காவிய ராகமே உமா ரமணின் குரல்!

| பாடகர் உமா ரமணன் (69) மறைவையொட்டிய புகழஞ்சலி கட்டுரை |RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments