Tuesday, April 23, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்கிறிஸ்துமஸ் பண்டிகை: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து | CHRISTMAS FESTIVAL: CM MK Stalin, Leaders Greetings

கிறிஸ்துமஸ் பண்டிகை: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து | CHRISTMAS FESTIVAL: CM MK Stalin, Leaders Greetings


சென்னை: இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், உபதேசியார் நல வாரியம், சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு, ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள் என திராவிட மாடல் அரசின் சார்பில் கிறித்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்: சக மனிதர்களை மதிப்பதற்கு கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல் & பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம்.

வைகோ: பகையும் வெறுப்பும் வளர்ந்து, படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில், சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் இரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழகத்துக்கு இன்றியமையாத தேவை ஆகும். அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறித்துவப் பெருமக்களுக்கு, மதிமுக சார்பில், மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி: கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கே.எஸ்.அழகிரி: கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், 1951 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2023 இல் மக்கள் தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன. அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றுகிற கிறிஸ்தவ சமுதாயத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

திருமாவளவன்: இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு – தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது. ஆகவே தான், கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவி இன்றும் வெற்றிகரமாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகிறது. இயேசு பெருமான் சகோதரத்துவத்தின் அடையாளம். எனவே அவரைப் போற்றுவது என்பது சகோதரத்துவத்தைப் போற்றுவதேயாகும். சகோதரத்துவம் தழைக்குமிடத்தில் தான் சனநாயகம் கோலோச்சும்.

திருநாவுக்கரசர்: புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காக கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் மற்றும் அனாதை இல்லங்கள் நடத்தி வருவதில் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். ஏழைகளுக்கு சேவை செய்வதையே தங்களது வழிபாட்டு முறைகளாக அமைத்துக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன்.

அன்புமணி ராமதாஸ்: இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும். இயேசுவின் கொள்கைகள் மட்டுமின்றி அவற்றை பின்பற்றுவோரும் வெற்றி பெறுவது உறுதி. எனவே, இந்த உலகில் பொருள் படைத்தவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம்.

டிடிவி தினகரன்: அன்புதான் உலகின் ஆகப்பெரிய சக்தி என்பதை நிரூபித்து அதன் வழியாகவே இவ்வுலகை வென்றெடுத்தவர் இயேசுநாதர். நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் நிலைநிறுத்துவோம். கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

செல்வப்பெருந்தகை: பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏசு பிரானை அன்று துதித்தவர்கள் ‘பூமியிலே சமாதானமும், மனுஷரிடைய பிரியமும் உண்டாவதாக’ என்று ஆனந்தமாய் முழங்கிப் போற்றினார்கள். மானுடர்களுக்கு அவர் அருளிய அற்புதமான போதனைகளை கடைபிடித்து நாட்டில் அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், வன்முறை ஒழிந்திடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பொங்கிடவும், சாதி, மத, இன வேற்றுமைகளை மறந்து நல்லிணக்கம் பேணிக் காப்பதற்கு இந்நன் நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

சரத்குமார்: இயேசுகிறிஸ்துவின் போதனைகளை மனதில் தாங்கி மக்கள் சிரமத்திற்குள்ளான போது, துணைநின்ற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இந்நாளில் ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் உருவாக ஒன்றிணைவோம்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments