Tuesday, April 16, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்: ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்: ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் | Central team inspects rain flood damage in Tuticorin Rs 5000 crore damage


தூத்துக்குடி/ திருநெல்வேலி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வை தொடங்கினர். ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் ஏற்பட்டிருப்பதாக தமிழகவருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு முதல் 18-ம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

28 பேர் உயிரிழப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் மூழ்கி 16 பேர்,சுவர் இடிந்து விழுந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடியாத நிலையில் சேத மதிப்பு முழுமையாக தெரியவரவில்லை. 4 மாவட்டங்களிலும் 85 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, வேளாண்மை கூட்டுறவு இயக்குநர் கே.பொன்னுசாமி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை இயக்குநர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்து, வெள்ள பாதிப்புகள்குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர், 2 குழுக்களாக பிரிந்து சென்று, அந்தோணியார்புரம், கருங்குளம், வைகுண்டம், ஏரல், ஆத்தூர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்தனர். தமிழக வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ்,தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதிஉள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

தூத்துக்குடியில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் கூறும்போது, “தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5,000 கோடிக்குசேதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முழு சேதாரம், உயிரிழப்பு விவரங்கள் விரைவில் தெரியவரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.

4 இடங்களில் மக்கள் மறியல்: நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று கூறி, கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையின் 4 இடங்களில் நேற்று மாலை வரை தொடர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் நிலைமை சீராகாததால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்து 4 நாட்களுக்கு பின்பு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 அடி உயரத்துக்கு, 36 மணி நேரமாக தேங்கியிருந்த தண்ணீர் நேற்று வடிந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. ஆயிரக்கணக்கான முக்கிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், பேரிடர் மீட்பு படையினருடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 நாட்களாக சிக்கி தவித்த அமைச்சர் மீட்பு: தமிழக மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த18-ம் தேதி மாலை ஏரல் பகுதிக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், அங்கிருந்து தூத்துக்குடி திரும்பும் வழியில், உமரிக்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இதனால் உமரிக்காடு கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டில் தங்கினார். அப்பகுதியையும் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கிருந்து அமைச்சரால் வெளியே வரமுடியவில்லை. தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டதால் தகவல் தெரிவிக்கவும் இயலவில்லை.

இந்நிலையில், அமைச்சர் சிக்கியுள்ள தகவல் அறிந்ததும், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அங்கு சென்று அமைச்சரை மீட்டு அழைத்து வந்தனர்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments