Sunday, April 14, 2024
No menu items!
Google search engine
Homeதொழில்நுட்பம்விலங்குகள், பறவைகளிடம் இருந்து பயிர்களை காக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் நவீன கருவி! | Modern...

விலங்குகள், பறவைகளிடம் இருந்து பயிர்களை காக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் நவீன கருவி! | Modern tool to protect crops from animals, birds


மதுரை: புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள்கூட விவசாயத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர்களைப் பராமரித்து விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டுவருவது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் பிரசவ வலிக்கு ஈடாகப் பார்க்கப்படுகிறது. புயல், மழையால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடும், அரசு வழங்கும் நிவாரணமும் கிடைக்கிறது. விலங்குகள், பறவைகளால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை. ஆனால், இயற்கை சீற்றங்களைபோல், யானை, பன்றி, ஆடு, மாடு மற்றும் பறவைகளால் ஏற்படும் சேதமும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன.

கடந்த காலத்தைப்போல் இல்லாமல் தற்போது விவசாயமும் மற்ற துறைகளைப் போல் நவீனமயமாகி வருகிறது. விதை விதைப்பது, களையெடுப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வதற்கு நவீன இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையை இந்த இயந்திரங்கள் ஓரளவு ஈடு செய்தாலும், பயிர்களை விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க நவீன கருவி இல்லையா என்ற கேள்வி விவசாயிகளிடையே நீண்ட காலமாக உள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள், ‘பஞ்சுர்லி’ என்னும் சூரிய மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய நவீன கருவியை வடிவமைத்துள்ளனர். பறவைகள், விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற இந்தக் கருவி உதவுகிறது.

பறவைகள், விலங்குகளை விரட்டுவதற்கான

கருவியிலிருந்து இரவில் வெளிப்படும் வெளிச்சம்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இந்தக் கருவியின் மூலம் 5 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களைப் பாதுகாக்க முடியும். அனைத்துக் கால நிலைகளிலும் இயங்கக் கூடியது. மிகக் குறைந்த விலையில் இந்த நவீன கருவியை வடிவமைத்துள்ளனர். தற்போது பரிசோதனை முறையில் கொடைக்கானல், மதுரையில் உள்ள விளை நிலங்களில் இந்தக் கருவியைப் பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர். இதில், இந்தக் கருவி பறவைகள், விலங்குகளிடமிருந்து வெற்றிகரமாக பயிர்களைப் பாதுகாப்பது தெரிய வந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில், இந்த புதிய கருவியைக் காட்சிப்படுத்தியிருந்தனர். அதன் செயல்விளக்கத்தை விவசாயிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இது குறித்து ஜெகதீஸ்வரன் கூறியதாவது: இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு சாப்ட்வேர் பயிற்சி, பாடத்திட்டத்துக்கான ‘ப்ராஜக்ட்’ பயிற்சிகள் வழங்கி வந்தோம். தற்போது 3 ஆண்டுகளாக விவசாயத்துக்குத் தேவையான நவீன கருவிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். ‘பஞ்சுர்லி’ கருவி பயிர்களை பறவைகள், விலங்குகளிடமிருந்து திறம்பட காக்கிறது. இக்கருவிக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்துள்ளோம். இந்த நவீன கருவியை கேட்கும் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க அரசுத் துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். மலையில் இருந்து இறங்கும் யானைகள், பன்றிகளே விவசாயத்தை அதிகம் சேதப்படுத்துகின்றன. அதனை விரட்டுவதற்கு விவசாயிகள், நெருப்பைக் காட்டுவது, பட்டாசு வெடிப்பது போன்ற பல்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றனர். அவை தற்போது விலங்குகளுக்கு பழக்கமாகிவிட்டன. அதனை மீறியே தற்போது விலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துகின்றன.

ஜெகதீஸ்வரன்

எங்களின் கருவி 24 மணி நேரமும் செயல்படக் கூடியது. பகலில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒலி எழுப்பும். இரவில் ஒலி எழுப்புவதோடு, 800 மீட்டர் வரை ‘டார்ச் லைட்’ போல் வெளிச்சம் அடிக்கும். தொடர்ச்சியாக ஒலி எழுப்பாமல் வெளிச் சத்துடன் இடைவெளிவிட்டு ஒலி எழுப்புவதால் விலங்குகள் பீதியடைந்து திரும்பிச் சென்றுவிடுகின்றன. விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க விவசாயிகள் சிலர் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். இதனால் சில நேரங்களில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோகின்றன. இதற்கு மாற்றாக எங்கள் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் பயிருக்கும் சேதமில்லை, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பாதிப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments