Saturday, May 25, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்விவசாயத்திலும், நில தானத்திலும் முன்மாதிரி: வறண்ட நிலத்தை வளமாக்கும் முன்னோடி விவசாயி முருகேசன்! | pioneer...

விவசாயத்திலும், நில தானத்திலும் முன்மாதிரி: வறண்ட நிலத்தை வளமாக்கும் முன்னோடி விவசாயி முருகேசன்! | pioneer farmer who fertilizes dry land in sivagangai


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அ.கருங்குளத்தில் எம்.முருகேசன் (68) விவசாயத்தில் சாதித்ததோடு, நில தானத்திலும் முன்னோடியாக விளங்கி வருகிறார். அவருக்கு 1,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதி நீர்வளம் குறைந்த வறண்ட பகுதி. இதனால் பலரும் விவசாயத்தை கைவிட்டு, வெளியூர்களுக்கு இடம் பெயர தொடங்கினர். இதனால் விவசாயத்தை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென முருகேசன் நினைத்தார். ஆனால், அதற்கு போதுமான நீராதாரம் இல்லை. இதையடுத்து நிலத்தை சுற்றிலும் அகழி அமைத்து, மொத்தமாக ஒரே இடத்துக்கு மழைநீரை கொண்டு வந்தார். இதன்மூலம் 10 ஏக்கரில் கண்மாய் போன்ற நீர்நிலையை உருவாக்கினார். இந்த நீர்நிலை என்றுமே வற்றாத பொய்கையாக உள்ளது.

மேலும் ஆங்காங்கே கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் நீர் ஆதாரங்களை உருவாக்கினார். அவற்றை பயன்படுத்தி 300 ஏக்கரில் அல்போன்சா மாங்கன்றுகளை நடவு செய்தார். மாங்கன்றுகளை அவர் பெங்களூருவில் இருந்து வாங்கி வந்தார். 10 மீட்டருக்கு ஒன்று என 300 ஏக்கரில் 10,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். 20 ஆண்டுகள் கடந்தநிலையில் பெரிய மரங்களாக வளர்ந்திருக்கின்றன. இயற்கை விவசாய முறையை கடைபிடித்து வருகிறார். முழுமையாக சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஆண்டுக்கு 300 டன் முதல் 500 டன் வரை மாம்பழங்கள் கிடைக்கின்றன.

மேலும் 40 ஏக்கரில் 20,000 செம்மரங்களை நடவு செய்துள்ளார். அவை வளர்ந்து பெரிய மரங்களாக உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் அவற்றை அறுவடை செய்யலாம். நூறு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தேங்காய்களை பறித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்புகிறார். மட்டை, நார்களை தென்னைகளுக்கு உரமாக்கி வருகிறார். இதனால் காய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தோட்டத்தைச் சுற்றி பார்க்க கம்பி வேலியையொட்டி 15 அடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதைக்கு இருபுறமும் தேக்கு, வாழை, செம்மரங்களை நடவு செய்துள்ளார்.

மேலும் பல நூறு சந்தன மரங்களையும் நடவு செய்துள்ளார். இதனால் தோட்டத்துக்குள் செல்லும்போதே ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்வதுபோல் பசுமையாகவும், குளுமையாகவும் உள்ளது. இவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மை விருதை அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன் வழங்கி பாராட்டிள்ளார். இதுதவிர பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் முருகேசன் விவசாயத்தில் மட்டுமின்றி, பள்ளி, கோயில், ஏழைகள், நீர்நிலைகளுக்கு நிலம் தானம் வழங்குவதிலும் முன்னோடியாக விளங்கி வருகிறார்.

இதுகுறித்து விவசாயி எம்.முருகேசன் கூறியதாவது: சிறுவயதாக இருக்கும்போது எனது தாத்தா குறைந்த பகுதியில் மா சாகுபடி செய்தார். அப்போதே எனக்கு விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், மழைக் குறைவு பகுதியாகவும், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தில் இருந்ததாலும் விவசாயம் செய்வதில் சவால் இருந்தது. இதனால் அவ்வப்போது பெய்யும் மழைநீரை சேமித்து விவசாயம் செய்ய முடிவு செய்தேன். இதற்காக சுற்றிலும் அகழி அமைத்து ஒரே இடத்துக்கு தண்ணீரை கொண்டு வந்தேன். இதனால் வறட்சியிலும் விவசாயம் சாத்தியமானது. மேலும் இப்பகுதியில் அல்போன்சா மாம்பழம் வராது என்றார்கள். ஆனால், சரியான இடைவெளியில் நடவு செய்து, முறையான நீர் மேலாண்மையால் அல்போன்சா மிகப் பெரிய பலனை அளித்து வருகிறது.

இதற்காக என்னை கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. மாம்பழத்தை மார்ச் முதல் ஜூலை வரை பறித்து, தமிழகம் மட்டுமின்றி புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகிறோம். இதுதவிர சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கும். அதையும் விவசாயத்துக்கே செலவழித்து விடுவோம். கடந்த காலங்களில் எனது தோட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் தினமும் பணிபுரிவர். நூறு நாள் வேலைத் திட்டத்தால் வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் தற்போது இயந்திரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

தோட்டத்தில் விவசாயத்துக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கண்மாய்.

எனினும் எங்கள் தோட்டத்தில் குறைந்தது 50 பேருக்காவது வேலை கொடுத்து கொண்டே இருப்போம். மா மரங்களை கவாத்து செய்வது, அவற்றை சுற்றிலும் களைகள் வளர்வதை தடுக்க அவ்வப்போது உழவு செய்வது என தொடர்ந்து பணிகள் இருந்து கொண்டே இருக்கும். உழவு செய்யும்போது சொட்டுநீர் குழாய்கள் இடையூறாக இருக்கின்றன. இதனால் நிலத்துக்கு அடியில் 3 அடி ஆழத்தில் குழாய் பதித்து தண்ணீர் பாய்ச்சும் முறைக்கு மாறி வருகிறோம். தற்போது 10 ஏக்கரில் அமைத்துள்ளோம். தொடர்ந்து அனைத்தையும் நிலத்துக்கு அடியில் மாற்ற உள்ளோம்.

படிப்படியாக தரிசாக உள்ள இடங்களிலும் செம்மரக்கன்று, தேக்கு மரக்கன்று, வாழை போன்றவற்றை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளோம். ஆங்காங்கே குறுங்காடுகளையும் ஏற்படுத்தி வருகிறோம். விவசாயப் பணியோடு நில தானமும் வழங்கி வருகிறோம். பெரிய கருங்குளத்தில் பிள்ளையார் கோயிலுக்கு 13.08 சென்ட் நிலம், நிலம் இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு 10 ஏக்கர் வரை பூமி தானம் செய்துள்ளோம். உசிலங்குளம் பெரிய கண்மாய் கழுங்கு கட்ட இடம் கொடுத்துள்ளோம். கைக்குடி அரசு நடுநிலைப் பள்ளி கட்ட இடம், சாலை அமைக்க 8 ஏக்கர் நிலம், மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடம் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments