Saturday, May 18, 2024
No menu items!
Google search engine
Homeகல்விசட்டம் படித்து சாதிக்க விருப்பமா? - ஓர் அடிப்படை வழிகாட்டுதல் | A basic guideline...

சட்டம் படித்து சாதிக்க விருப்பமா? – ஓர் அடிப்படை வழிகாட்டுதல் | A basic guideline for who Interested in studying law


வழக்கறிஞர் என்பது சமுதாயத்தில் தவிர்க்க முடியாத மிகவும் மதிப்புமிக்க பணியாகும். அதற்கு அடிப்படையான சட்டப்படிப்பில் சேரத் தயங்குவதற்கு அறியாமையே முக்கியக் காரணமாகிறது. சட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்கு அப்பாலும் பணி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்து அரசுத் துறைகளிலும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் சட்ட ஆலோசகர் பணியிடங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், துடிப்பான வழக்கறிஞர்கள் போட்டித் தேர்வு மூலம், நேரடியாக நீதிமன்றங்களின் நடுவராகவும் தேர்வாக முடியும். இதுதவிர தனியாரின் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை பொறியியல் கல்லூரிகளுக்கு நிகராக வளாக நேர்காணல் மூலம் பணிவாய்ப்புகளை வாரி வழங்கத் தொடங்கியுள்ளன.

மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கலெக்டர் முதல் பல்வேறு அரசு துறை உயர்பதவிகளில் சேர்வதற்கு அடிப்படையாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடிப்பார்கள். அது சட்டப் படிப்பாக இருப்பின் போட்டித் தேர்வு எழுத எளிதாவதுடன், சேர்ந்த பணியில் சிறக்க வாய்ப்பாகும்.

உதாரணத்துக்கு, சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் விருப்பப்பாடமாக சட்டமும் இடம்பெற்றிருப்பதால், ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவில் இருப்பவர்கள் கணிசமாக சட்டம் படிக்கத் தொடங்கியுள்ளார்கள். இதர படிப்புகளை போலவே சட்டப் படிப்பிலும் உயர்கல்விகளை முறையாக முடித்து சட்டக் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர் பணிகளிலும் சேரலாம்.

7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு – தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை போன்றே நுழைவுத் தேர்வு இன்றி சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பி.ஏ.,எல்.எல்.பி., எனப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அரசு, தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். ஒரு சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இவற்றை வழங்குகின்றன.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் 14 நகரங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதர படிப்புகளைவிட மிகவும் சொற்பமான செலவில் இங்கு சேர்ந்து படிக்கலாம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலான வழக்கமான இட ஒதுக்கீடு, பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கான 4 சதவீதம் என பல்வேறு முன்னுரிமைகள் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு காத்திருக்கின்றன. பிளஸ் 2-ல் குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 45 சதவீதம் எடுத்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெறுகிறார்கள்.

இவற்றுக்கு அப்பால் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law) பி.ஏ.எல்.எல்.பி மட்டுமன்றி பி.பி.ஏ.எல்.எல்.பி, பி.காம்.எல்.எல்.பி, பி.சி.ஏ.எல்.எல்.பி ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதில் சேர பிளஸ் 2 குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 70 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று பேராசிரியர் கரும்பலகையில் எழுதிய இணைய முகவரியை சிரத்தையாக மாணவர்கள் குறித்துக்கொண்டனர். வழக்கமான பாடங்களுடன் செய்தித்தாள்களில் வெளியாகும் உலக நடப்புகள், அரசியல் நிகவுகள் மற்றும் நீதிமன்ற வழக்கு விபரங்களைத் தொடர்ந்து வாசித்து வருவதும், எதிர்காலத்தில் முழுமையான வழக்கறிஞராக உங்களை மாற்றும்.

கட்டுரையாளர் – எஸ்.எஸ்.லெனின் | தொடர்புக்கு: leninsuman4k@gmail.comRELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments