Friday, May 24, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்சொந்த வாழ்க்கையில் இறுதி வரை கம்யூனிஸ்ட் நெறிகளை கடைபிடித்த 'தகைசால் தமிழர்' சங்கரய்யா | n...

சொந்த வாழ்க்கையில் இறுதி வரை கம்யூனிஸ்ட் நெறிகளை கடைபிடித்த ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா | n Sankaraiah was Tagaisal Tamizar who adhered communist principles in own life


சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை பூர்வீகமாகக் கொண்ட நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1922-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி 2-வது மகனாக பிறந்தார் என்.சங்கரய்யா. அவருக்கு முதலில் பிரதாப சந்திரன் என்று பெயர் வைக்கப்பட்டு, பின்னர் அவருடைய பாட்டனாரின் பெயரான சங்கரய்யா என்ற பெயர் சூட்டப்பட்டது.

மதுரை நகராட்சியில் பொறியாளராக பணி கிடைத்ததை ஒட்டி, நரசிம்மலுவின் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும், ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்த சங்கரய்யா, 1937-ம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். மாணவ பருவத்திலேயே இந்தி திணிப்பு எதிர்ப்பு, விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார். அவர் முன்நின்று ஒருங்கிணைத்த கூட்டங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர், 1940-ம்ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

விடுதலை போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட ஆங்கிலேயர்கள் மாணவர் சங்கரய்யாவையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். கல்லூரி கல்வி பாதியில் நின்றது. எனினும், நாட்டின் விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கும் பணியை மேற்கொண்டதுடன் 1942-ம்ஆண்டு தனது 21-வது வயதில் ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மதுரை மாவட்டச் செயலாளராக திறம்படச் செயலாற்றினார். 1946-ம்ஆண்டு கம்யூனிஸ்ட்டுகள் மீது மதுரை சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்மீண்டும் சிறைப்படுத்தப் பட்ட என்.சங்கரய்யாஉள்ளிட்டோர் 1947 ம் ஆண்டு ஆக.14-ம் தேதி இரவு விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப் போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் 8 ஆண்டுகள் சிறையிலும், 4 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து இயக்கப் பணியாற்றியவர் சங்கரய்யா.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலிலிருந்து வெளிநடப்பு செய்த 32 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1964-ம்ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வானபோது அதில் முக்கியப் பங்காற்றினார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் மற்றும் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றினார். 1995 முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழக மாநிலக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றினார். 1967, 1977 மற்றும் 1980 தேர்தல்களில் போட்டியிட்டு மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி மொழியாக தமிழே விளங்க வேண்டும்என்று முழங்கினார்.

.

பேரவையில் பாட்டாளி வர்க்கத்தின் குரலாக விளங்கினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற மார்க்சிஸ்ட் திட்டத்தின் அம்சங்களை பின்பற்றுவதில் உறுதியாக நின்றவர். அகில இந்திய விவசாயிகள்சங்கத்தை வளர்த்தெடுத்த தலைவர்களில் ஒருவர் சங்கரய்யா. விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் நெடுங்காலம் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரின் முதல் ஆசிரியர். சாதிய வன்முறை மற்றும் வகுப்புவாத அபாயம் தலைதூக்கிய நேரங்களில் அதற்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

சொந்த வாழ்க்கையில் கம்யூனிஸ்ட் நெறிமுறைகளை இறுதி வரையிலும் கடைபிடித்தவர். கட்சியைச் சேர்ந்த நவமணியுடனான அவரது திருமணமும் சாதி-மத மறுப்பு காதல் திருமணமாகும். தன்னுடைய குடும்பத்தில் அனைவரும் சாதி-மத மறுப்பு திருமணம் செய்துகொள்ள காரணமாக அமைந்தவர்.

தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை உருவாக்கி முதல் விருதை சங்கரய்யாவுக்கு அவரது நூறாவது பிறந்த நாளின்போது வழங்கி சிறப்பித்தது.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments