Sunday, April 14, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்உலகளாவிய ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 15% - பிரதமர் மோடி பெருமிதம் | Today, India...

உலகளாவிய ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 15% – பிரதமர் மோடி பெருமிதம் | Today, India is becoming the engine of global growth with 15 percent share in global GDP growth: Narendra Modi


மும்பை: உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்குடன் இந்தியா இன்று சர்வதேச வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “இந்திய ரிசர்வ் வங்கி இன்று 90 ஆண்டுகளை நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. ரிசர்வ் வங்கி சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.

அதன் தொழில் முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி 90 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துகள். தற்போதைய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகள். இன்று தயாரிக்கப்பட்ட கொள்கைகள் ரிசர்வ் வங்கியின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும். அடுத்த 10 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியை அதன் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானங்களுக்கு அடுத்த தசாப்தம் மிகவும் முக்கியமானது. வேகமான வளர்ச்சியை நோக்கி ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை, நம்பிக்கை, ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்தப்படுகிறது. அதன் இலக்குகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு தமது நல்வாழ்த்துகள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் நாணய மற்றும் நிதிக் கொள்கைகளை ஒருங்கிணைக்க வேண்டியது மிகவும் முக்கியம். 2014-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு கொண்டாட்ட நேரத்தில், நாட்டின் வங்கி அமைப்பு எதிர்கொண்ட வாராக்கடன் மற்றும் ஸ்திரத்தன்மை போன்ற சவால்கள் ஏராளம். அங்கிருந்து தொடங்கி, இன்று இந்திய வங்கி முறை உலகின் வலுவான மற்றும் நீடித்த வங்கி அமைப்பாக பார்க்கப்படும் ஒரு கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். ஏனெனில் அந்த நேரத்தில் இறந்து போகும் நிலையில் இருந்த வங்கி அமைப்பு தற்போது லாபத்தில் உள்ளதுடன், சாதனை மதிப்பைக் காட்டுகிறது.

தெளிவான கொள்கை, நோக்கங்கள் மற்றும் முடிவுகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். நோக்கங்கள் சரியாக இருக்கும் இடத்தில், முடிவுகளும் சரியாக இருக்கும். அங்கீகாரம், தீர்மானம் மற்றும் மறு மூலதனம் ஆகிய உத்திகளின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு உதவுவதற்காக 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதல் மேற்கொள்ளப்பட்டது.

நொடித்துப் போதல் மற்றும் திவால் சட்டம் மட்டும் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு தீர்வு கண்டுள்ளது. ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் தவறிய 27,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஐபிசியின் கீழ் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே தீர்க்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் 11.25 சதவீதமாக இருந்த வங்கிகளின் மொத்த வாராக் கடன் 2023 செப்டம்பரில் 3 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் நிதி வரையறைகள் மற்றும் சிக்கலான சொற்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ளப்படும் பணிகள் சாமானிய குடிமக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய வங்கிகள், வங்கி அமைப்புகள் மற்றும் கடைசி வரிசையில் உள்ள பயனாளிகளுக்கு இடையேயான தொடர்பை அரசு எடுத்துரைத்துள்ளது. நாட்டில் உள்ள 52 கோடி ஜன் தன் கணக்குகளில் 55 சதவீதம் பெண்களுடையது.

யுபிஐ மூலம் மாதந்தோறும் 1200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புதிய வங்கி முறை, பொருளாதாரம் மற்றும் நாணய அனுபவத்தை உருவாக்க உதவியுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் இலக்குகள் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் போது, ரொக்கமில்லா பொருளாதாரம் கொண்டு வரும் மாற்றங்களை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியா போன்ற பெரிய நாட்டின் வங்கித் தேவைகள் மிகப் பெரியவை. வங்கிச் சேவையை எளிதாக்குவதை மேம்படுத்தி, குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான சேவைகளை வழங்க வேண்டியது அவசியம்.

முன்னுரிமைகள் தெளிவாக இருந்தால் ஒரு நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. கோவிட் பெருந்தொற்று பரவலின்போது நிதி விவேகத்திற்கு அரசு கவனம் செலுத்தியது. சாதாரண குடிமக்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளித்தது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் துன்பத்திலிருந்து வெளிவர வழிவகுத்தது. இன்று நாட்டின் வளர்ச்சிக்கு வேகம் அளித்துள்ளது. உலகின் பல நாடுகள் தொற்றுநோயின் பொருளாதார அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முயற்சிக்கும் நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்தியாவின் வெற்றிகளை உலக அளவில் எடுத்துச் செல்வதில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவொரு வளரும் நாட்டிற்கும் பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு இடையில் சமநிலையை உருவாக்குவது அவசியம். ரிசர்வ் வங்கி இதற்கு ஒரு முன்மாதிரியாக மாறி, உலகில் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க முடியும். இதன் மூலம் முழு உலகளாவிய தெற்கு பிராந்தியத்திற்கும் ஆதரவளிக்க முடியும்.

இன்று உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ரிசர்வ் வங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது. நாட்டில் புதிய துறைகளை திறந்து விட்டதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை அரசின் கொள்கைகள் உருவாக்கியுள்ளன. இந்திய உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக எம்.எஸ்.எம்.இ-க்கள் உள்ளன. கோவிட் பெருந்தொற்று பரவலின் போது எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு ஆதரவளிக்க கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. புதிய துறைகளுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி கொள்கைகளை வகுக்க வேண்டும்.

விண்வெளி மற்றும் சுற்றுலா போன்ற புதிய மற்றும் பாரம்பரிய துறைகளின் தேவைகளுக்கு வங்கியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், அயோத்தி உலகின் மிகப்பெரிய மத சுற்றுலா மையமாக மாறப் போகிறது என வல்லுநர்கள் கூறி இருக்கிறார்கள்.

சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நிதித் திறனில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கி, நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக அரசு மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை. இந்தத் தகவல் அவர்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.

உலகளாவிய பிரச்சினைகளின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார தற்சார்பை அதிகரிக்க வேண்டும். இன்று, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்புடன், இந்தியா உலக வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது. ரூபாய் பயன்பாட்டை உலகம் முழுவதும் எளிதில் அணுகக்கூடியதாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டின் திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு வலுவான வங்கித் துறை அவசியம். செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பங்கள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. வளர்ந்து வரும் டிஜிட்டல் வங்கி அமைப்பில் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உலகளாவிய சாம்பியன்களின் கடன் தேவைகளை தெருவோர வியாபாரிகளுக்கும், அதிநவீன துறைகளிலிருந்து பாரம்பரிய துறைகளுக்கும் பூர்த்தி செய்வது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு முக்கியமானது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் வங்கி தொலைநோக்கை முழுமையாக பாராட்டுவதற்கு ரிசர்வ் வங்கி பொருத்தமான அமைப்பாகும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பெய்ன்ஸ், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் காரத், பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments