Friday, May 24, 2024
No menu items!
Google search engine
Homeமாநிலம்கலைத் துறையில் 'அஷ்டாவதானி' பத்மா சுப்ரமணியம்: சங்கீத நாடக அகாடமி தலைவர் சந்தியா புகழாரம் |...

கலைத் துறையில் ‘அஷ்டாவதானி’ பத்மா சுப்ரமணியம்: சங்கீத நாடக அகாடமி தலைவர் சந்தியா புகழாரம் | Padma Subrahmanyam is Ashtavathani arts sangeet natak academy president praised


சென்னை: பிரபல பரதநாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியத்தின் 80-வது பிறந்தநாளையொட்டி, ‘பத்மா 80’ என்ற விழா, சென்னை நாரதகான சபாவில் நேற்று முன்தினம்கொண்டாடப்பட்டது. நிருத்யோதயா, நாரத கான சபா, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் – ஜானகி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.

இதில், பத்மா சுப்ரமணியத்தின் பரதக்கலை மேன்மை குறித்து சதாவதானி ஆர்.கணேஷ், அர்ஜுன் பரத்வாஜ் இணைந்து எழுதிய ‘நயன சவன’ எனும் ஆங்கில நூலை, சங்கீத நாடக அகாடமி தலைவர் சந்தியா புரேச்சா வெளியிட, ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பெற்றுக் கொண்டார். விழாவில் அவர்கள் பேசியதாவது:

சந்தியா புரேச்சா: நடனக் கலைஞர், நடன இயக்குநர், பாடகர்,இசை அமைப்பாளர், இசை ஆராய்ச்சியாளர், ஆவணப்படம் உருவாக்குபவர் என அஷ்டாவதானியாக திகழ்ந்து, பல மைல்கல் சாதனைகளை படைத்தவர் பத்மா அக்கா. ஆலய சிற்பங்கள், நாட்டிய சாஸ்திரம் மூலம் ஆய்வு செய்து 108 கரணங்களை மீட்டுருவாக்கம் செய்தவர். பரதநாட்டியக் கலை மூலம் பழமையின் பெருமையை பாதுகாப்பதுடன், அதில் நவீனத்தையும் புகுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்த்துக் கொண்டிருப்பவர்.

நூல் ஆசிரியர்கள் ஆர்.கணேஷ், அர்ஜுன் பரத்வாஜ்: பத்மா சுப்ரமணியம் என்றால் ஆனந்தத்தின் அடையாளம். அதை இந்த நூலில் பதிவு செய்துள்ளோம். அவரது நுட்பமான அணுகுமுறையை 16-க்கும் மேற்பட்ட வகைமைகளில் தந்திருக்கிறோம்.

எஸ்.குருமூர்த்தி: பரதநாட்டிய கலையின் பின்னணியில் இருக்கும் பண்பாடு, கலாச்சாரம், சனாதனதர்மத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் பத்மா சுப்ரமணியம். அவரதுகலைப் பணியை தகுந்த முறையில்நாம் ஆவணப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

ரஷ்யா உடனான உறவு: பத்மா சுப்ரமணியத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பு அபூர்வமானது, பல ஆண்டுகளாக தொடர்வது. பத்மா சுப்ரமணியத்தின் தந்தை கே.சுப்ரமணியம், பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர்தான் இந்தோ சோவியத் கலாச்சார நட்புறவு மையத்தை கடந்த 1952-ல் தொடங்கினார்.

தென்னிந்தியாவில் முதன்முதலாக ரஷ்ய நூலகம் அவரதுஇல்லத்தில்தான் தொடங்கப்பட்டது.

தந்தை கே.சுப்ரமணியம் தயாரித்த ‘கீத காந்தி’ திரைப்படத்தில் 5 வயது குழந்தையாக தோன்றியது முதல், பத்மா சுப்ரமணியம் எனும் நடனத் தாரகையாக ஜொலித்தது வரை அவரது பல்வேறு சாதனைகளையும் தொகுத்து காணொளியாக திரையிட்டார் காயத்ரி கண்ணன்.

நிருத்யோதயா நாட்டியப் பள்ளி மாணவிகள், முன்னணி நாட்டியக் கலைஞர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். டாக்டர் அகிலா சீனிவாசன், டாக்டர் எஸ்.வைத்திய சுப்ரமணியம், டாக்டர் சுதா சேஷய்யன், பரதநாட்டியக் கலைஞர்கள் ரோஜா கண்ணன், நர்த்தகி நடராஜ் ஆகியோர் பத்மா சுப்ரமணியத்தை வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments