Thursday, April 25, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுODI WC 2023 | அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை!...

ODI WC 2023 | அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை! | india new zealand to pay semi finals today cwc 2023


மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து அரை இறுதியில் நுழைந்துள்ளது. மட்டை வீச்சில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரின் பயமில்லாத தாக்குதல் ஆட்ட அணுகுமுறை நடு ஓவர்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் ரேட் குறித்து அச்சம் இல்லாமல் விளையாடுவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. 503 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மாவும், 7 ஆட்டங்களில் விளையாடி 270 ரன்கள் சேர்த்துள்ள ஷுப்மன் கில்லும் மீண்டும் ஒரு முறை சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.

594 ரன்கள் வேட்டையாடி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலி, 50-வது சதம் எனும் மைல் கல்லை எட்ட காத்திருக்கிறார். அணியின் வெற்றியுடன் இந்த மைல்கல் சாதனையை அவர், கடக்க விரும்பக்கூடும். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

இதன் மூலம் நடுவரிசை பேட்டிங்கின் பலமும் அதிகரித்துள்ளது. பிரதான பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே சீராக ரன்கள் சேர்க்க தடுமாறிவருகிறார். 5 ஆட்டங்களில் விளையாடிஉள்ள அவர், 87 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதில் சூர்யகுமார் யாதவ் முனைப்பு காட்டக்கூடும்.

பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், மொகமது ஷமி ஆகியோர் வலுவாக உள்ளனர். இதில் 17 விக்கெட்களை வேட்டையாடி உள்ள பும்ரா, ஓவருக்கு சராசரியாக 3.65 ரன்களையே வழங்கி உள்ளார். இந்த தொடரில் அவரை விட மிக சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் எவரும் இல்லை. அதேவேளையில் தனது அனுபவத்தால் மிளிரும் மொகமது ஷமி 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய போதிலும் 16 விக்கெட்களை சாய்த்து அசத்தி உள்ளார். 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ள மொகமது சிராஜும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொடக்க ஓவர்களில் அழுத்தம் கொடுப்பவராகவே திகழ்ந்துவருகிறார்.

சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் 16 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ரவீந்திர ஜடேஜா, 14 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணியின் ரன் குவிப்பை நடு ஓவர்களில் கட்டுப்படுத்துவதிலும் தேவையான நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவர்களாகவும் திகழ்கின்றனர். நடப்பு உலகக்கோப்பை தொடர் முழுவதுமே தட்டையான ஆடுகளங்களில் மற்ற அணிகளை விட இந்திய அணியின் பந்து வீச்சு தரமானதாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் இதை பிரலிபலிக்கச் செய்வதில் பந்து வீச்சாளர்கள் தீவிரம் காட்டக்கூடும்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த நிலையில் அதன் பின்னர் அடுத்தடுத்து 4 தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளானது. எனினும் கடைசி லீக்ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி கடைசிஅணியாக அரை இறுதி சுற்றில் கால்பதித்தது. பேட்டிங், பந்து வீச்சு என இரு துறையிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். 3 சதங்களுடன் 565ரன்கள் குவித்துள்ள இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா தொடக்க பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம் தொடுப்பவராக திகழ்கிறார்.

மற்றொரு தொடக்க வீரரான டேவன் கான்வே, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 152 ரன்கள் விளாசி அசத்தினார். ஆனால் அதன் பின்னர் விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் ஒன்றில் கூட அவர், அரை சதத்தை கடக்கவில்லை. எனினும் நடுவரிசையில் கேன் வில்லியம்சன், டேரில்மிட்செல் ஆகியோர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடும் திறனை கொண்டவர்கள். டாம் லேதம், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, லாக்கி பெர்குசன் கூட்டணி இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்க முயற்சிக்கக்கூடும். 16 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள மிட்செல் சாண்ட்னரும் அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளார். இவர்களுடன் சுழற் பந்து வீச்சில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் வலுசேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments